search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை போலீஸ் அதிகாரி"

    • போலீஸ் அதிகாரி வீட்டுக்கு நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • கட்டுக்கட்டாக பணமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏராளமான நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்.) நிதி நிறுவனம் பொதுமக்களிடம் கோடிக்கணக் கில் பணத்தை சுருட்டி ஏமாற்றியது அம்பலமானது.

    வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கிளைகளை அமைத்து செயல்பட்டு வந்தது.

    இந்த நிறுவனம் சார்பில் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 முதல் 25 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தையை கூறி கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    இதை நம்பி பொதுமக்கள் அதிக அளவில் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 84 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியை ஐ.எப்.எஸ். நிறுவனம் வாரி சுருட்டியது.

    ஆனால் பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்த படி வட்டி மற்றும் முதலீட்டுத்தொகையை அளிக்காததால் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக 31 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். ஐ.எப்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏராளமான தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 49 அசையா சொத்துக்கள் மற்றும் 1.12 கோடி தங்க நகைகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடாக் உத்தரவின் பேரில் ஐ.எப்.எஸ். நிதிநிறுவன மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்காக டி.எஸ்.பி. கபிலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டினார்.

    அப்போது நிறுவனத்துக்கு சாதகமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் எனக்கு என்ன செய்வீர்கள்? என்று கபிலன் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது டி.எஸ்.பி. கபிலன் ரூ.5 கோடி வரையில் பேரம் பேசியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் முதல்கட்டமாக ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கபிலன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

    இதுபொருளாதார குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் டி.எஸ்.பி. கபிலன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. கபிலன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    லஞ்ச புகாருக்குள்ளாகி இருக்கும் டி.எஸ்.பி. கபிலன் நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட பொருட்கள் வைக்கும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் கட்டுக்கட்டாக பணமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து கபிலன் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி போலியான நிதி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து ஏமாற்றியது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதுபோன்ற நிதி நிறு வனங்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு என்றைக்காவது ஒருநாள் நாம் போட்ட பணத்தில் சிறு பகுதியாவது கிடைக்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உரிய விசாரணை நடத்தி நிவாரணம் பெற்றுத்தர வேண்டிய டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவரே மோசடி நிதி நிறுவனத்திடம் விலை போய் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×